தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான வடகிழக்குப் பருவமழையில், சென்னைக்கு கிடைக்க வேண்டிய 80 செ.மீ. மழையில், 55 செ.மீ. மழை இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிவர் புயல் பாதிப்பு காரணமாக மாநகராட்சியின் அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து இதுவரை 302 புகார்கள் பதிவுசெய்யப்பட்டு 125 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், மழைநீர் தேங்கி இருந்ததாக 58 புகார்கள் பெறப்பட்டு 40 புகார்கள் உடனடியாகச் சரிசெய்யப்பட்டன. மீதமுள்ள 18 புகார்களைச் சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. உலக வங்கி, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் இரண்டாயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கில் இருந்த புகார்களின் எண்ணிக்கை 2015-க்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது.
சென்னையில் 58 இடங்கள் மிகவும் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டு மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதால், 85 விழுக்காடு மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
புவியியல் அமைப்பின்படி, கடல் மட்டத்திற்குச் சமமாக சென்னையும் உள்ளது. அதனால், வடிகால்கள் மற்றும் பருவமழை காரணமாக 1 மீட்டரைவிட அதிகமாக கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழைநீரும் அதிவேக மோட்டார் பம்புகள் மூலமாக விரைவில் அப்புறப்படுத்தப்படும்.
மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், மரங்களை அப்புறப்படுத்துவதற்கு என வார்டுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், 21 சுரங்கப்பாதை தண்ணீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டன. மூன்றாயிரத்து 738 பேர் அரசின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
மழையினால் ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க 100 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர் மாநகராட்சி முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாநகராட்சிக்கு உதவிட 23 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 210 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு தற்போது சீரமைக்கும் பணி நடந்துவருகிறது.
சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை சளி, காய்ச்சல், கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட 37 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதே மாநகராட்சியின் கடமையாக உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும்.
மெரினா கடற்கரை திறப்பது குறித்து மாநகராட்சி சார்பில் அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மழையால் சென்னையில் எந்த உயிர்ச்சேதமும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 400 கோடி செலவு - மாநகராட்சி ஆணையர் தகவல்