சென்னை: சென்னையில் மழை வெள்ள மீட்புப் பணிகள் குறித்து 15 ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினருடன் ரிப்பன் மாளிகையில் நேற்று (நவ.7) இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மழைக் கால மீட்புப் பணி நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருக்கு எடுத்துரைத்தார்.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி, "மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் வெள்ள நீரால் மீட்கப்படும் மக்களைத் தங்க வைக்க 169 முகாம்கள் தாயார் நிலையில் உள்ளது. அங்கு உணவு, மருத்துவ பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவும், அங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையில் உள்ள பள்ளங்கள், கழிவு நீர் ஓடைகள், அரசுத் துறை சார்பில் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆகியவற்றைச் சுற்றித் தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 முதல் 3 மாதங்களாக மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டதால், பெரும்பாலான இடங்களில் நீண்ட நேரத்திற்கு மேல் வெள்ள நீர் தேங்கவில்லை.
அதேபோல், மரக்கிளைகளை வெட்டி சீர்படுத்தியதால் பெருமளவில் மரங்கள் சாயவில்லை. பொது மக்களுக்கு உணவு வழங்க ஒரு லட்சத்து 5ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தேவை ஏற்படும் நிலையில், அப்பகுதியிலுள்ள நபர்களைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்படும்," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை