சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு (மே. 24) பாஜக நிர்வாகி பாலச்சந்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு காவலர் வழங்கியும் கூட இந்த கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாலச்சந்தரின் உறவினர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான பிரதீப் என்பவர் அவரது மனைவி, உறவினர்களுக்கு அடிக்கடி துணி எடுத்து வந்துள்ளார். ஆனால் துணிக்குண்டான பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் மாமூல் வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உறவினர்கள் பாலச்சந்தரிடம் தெரிவித்ததால், பாலச்சந்தர் காவல் துறையினரிடம் நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரவுடி பிரதீப்பின் சகோதரர் சஞ்சய் துணிக்கடைக்கு சென்று துணி எடுத்துவிட்டு பணம் தராமல் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த பிரதீப், துணிக்கடைக்கு சென்று உரிமையாளர்களிடம் பாலச்சந்தரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து பாலச்சந்தரின் உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தபோதிலும் வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று ரவுடி பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், நண்பர் கலைவாணன் மற்றும் கூட்டாளிகள் இணைந்து பாலச்சந்தரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. முன்னதாக ரவுடி பிரதீப் கைது செய்யப்பட்டிருந்த போது, அவரது கூட்டாளி ஒருவர் துணிக்கடை உரிமையாளரை மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் ரவுடி பிரதீப்பின் மனைவி துணி எடுத்ததற்கு பணம் கொடுக்காமல், மீண்டும் துணி கேட்கிறார்கள். அதற்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டதாக கூறி துணிக்குண்டான பணம் கேட்டதற்கு உரிமையாளரை மிரட்டுவது போன்று ஆடியோவில் பதிவாகி உள்ளது.
ரவுடி கும்பல் மிரட்டும் ஆடியோ, துணிக்கடைக்கு கும்பல் வந்து செல்லும் சிசிடிவி காட்சி ஆகியவற்றை காவல் துறையினரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை!