சென்னை ஓட்டேரி வாழைமாநகரில் வசித்துவந்த சங்கரின் மனைவி தேவி(39) ஆவர். இவர்களது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒன்பது ஆண்டுகள் முன்பு மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சங்கர் இறந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்தவுடன் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (40) என்பவருடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இவர்கள் ஆறு வருடங்களுக்கு மேலாக வடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே தங்கராஜுக்கு தேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தங்கராஜிடம் வீட்டு வாடகை தர வேண்டும் என தேவி பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தேவி மீது ஊற்றி தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.
தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாததால், அவர்கள் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தங்கராஜை கைது செய்ததுடன், தேவியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காவல் துறையினரிடம் தேவி அளித்த வாக்குமூலத்தில், தங்கராஜ்தான் தீ வைத்து எரித்ததாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே இன்று காலை சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து தங்கராஜிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.