சென்னையை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், சாட்கரோ என்ற செயலி மூலம், சியாமளா என்ற பெண் நண்பரானார். நாளடைவில் வாட்ஸ் அப் மூலம் பேசி நெருக்கமானோம். தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், அங்கு கேண்டீன் நடத்தும் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாகவும் என்னிடம் கூறினார். அதை நம்பி 56 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். பணத்தைக் கொடுத்த பிறகு கேண்டீன் காண்ட்ராக்ட் குறித்து பேசுவதற்காக சியாமளாவை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் குறித்து விசாரித்தேன். அப்போதுதான் ஏமாந்ததை அறிந்தேன். ஆகவே சியாமளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு கோவாவில் தொடங்கப்பட்டது தெரிய வந்தது. அதன்பின் கோவாவிற்கு விரைந்த போலீசார் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொர்வோரிம் பகுதியில் வசித்துவந்த சக்திவேல் (41) என்பவர் கைது செய்யப்பட்டார்.
காதலுனுடன் கூட்டு சேர்ந்து காதலி மோசடி: அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம், அவரது காதலி பிரியா என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் சாட்கரோ என்ற செல்போன் செயலி மூலம் இது போல சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பேசி, பணத்தை பெற்று அவர்கள் மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் விழுப்புரத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் ஏமாந்து 11 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த நபரிடம் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி நாடகமாடி உள்ளார் பிரியா.
குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இந்த பணத்தை கோவாவில் உள்ள கேசினோ சூதாட்டத்தில் செலவழித்து உல்லாசமாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர் கைது - 7 கிலோ பறிமுதல்