சென்னை: கலைஞர் கணினி கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 324 மாணவர்களுக்கு சான்றிதழ்களை அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வழங்கினர். சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் முயற்சியால், 2020ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதி 'கலைஞர் கணினி கல்வியகம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 3, 4, 5 ஆம் தொகுதியில் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும், 6 ஆவது தொகுதி மாணவர்களுக்கான தொடக்கவிழாவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினர்.
இதன்மூலம், சைதாப்பேட்டையில் படித்த பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப் பின், அவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
அந்த வகையில் கல்வியகத்தின் மூலம், முதல் தொகுதியில் 84 மாணவர்கள், 2ஆம் தொகுதியில் 92 மாணவர்கள், 3ஆம் தொகுதியில் 85 மாணவர்கள், 4ஆம் தொகுதியில் 124 மாணவர்கள் ஐந்தாம் தொகுதியில் 115 மாணவர்கள் என 498 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இதையும் படிங்க: கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்