இது தொடர்பாக, மத்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை இயக்குநர் சீனிவாசராவ் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில், தொழில் திறனை வளர்ப்பதற்காக தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் மாணவர்களை சேர்ப்பதற்காக பிப்ரவரி மாதத்தில் செங்கல்பட்டில் 19ஆம் தேதியும், சேலத்தில் 21ஆம் தேதியும், கோயம்புத்தூரில் 24ஆம் தேதியும், உளுந்தூர்பேட்டையில் 26ஆம் தேதியும், மதுரையில் 28ஆம் தேதியும், மார்ச் மாதம் திருச்சிராப்பள்ளியில் 2ஆம் தேதியும், திருநெல்வேலியில் 4ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க இருக்கின்றன. இந்த முகாமின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அந்த நிறுவனங்கள் பயிற்சியினை வழங்கும். அவர்களுக்கான பயிற்சி இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் சார்பாக 5,000 முதல் 7,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களும் தொழில் பழகுபவர்களுக்கு பயிற்சி நிதி வழங்கும். மத்திய அரசின் பெல், ஓஎன்ஜிசி, தொடர்வண்டித் துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகளிலிருந்து நேரடியாக பயிற்சி முகாமில் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்தப் பயிற்சி முகாமின் மூலம் 40 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு சுயதொழில் செய்யவும் வாய்ப்பு நிறையவுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அது ஒரு கோரிக்கை திட்டம், தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம்': நிர்மலா சீதாராமன்