கேரள மாநிலம் கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் படித்து வந்தார். ஐஐடி நுழைவுத் தேர்வில் சிறந்த மாணவியாகத் தேர்வு பெற்ற ஃபாத்திமா லத்தீஃப், முதுகலை மனிதநேயம் பாடத்தைப் படித்து வந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, மாணவியின் தற்கொலை தொடர்பான விசாரணையை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, கூடங்குளம் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆகியோர் சென்னைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, 'கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சென்னை ஐஐடி-யில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வடமாநிலத்தில் படித்தால் மகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று எண்ணி, மாணவி ஃபாத்திமாவின் பெற்றோர் தமிழ்நாட்டில் சேர்த்தனர்.
ஆனால், தமிழ்நாட்டிலும் உரிய பாதுகாப்பு இல்லாமல், ஆதிக்க சமூகத்தின் அச்சுறுத்தலால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக' கூறினார்.
தொடர்ந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியபோது, ' இந்தியாவில் உள்ள எந்த ஐஐடியிலும் இல்லாத அளவிற்கு, சென்னை ஐஐடியில் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்னை ஐஐடியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும், இல்லையென்றால் ஐஐடியை நிரந்தரமாக மூட வழிவகை செய்ய வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:
'சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்'