சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள சிபிஐ குடியிருப்பில் வசித்து வந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிபிஐ ஆய்வாளரான நபேந்து முகர்ஜி (46). இவருக்கு கடந்த 28ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டு தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (மே 11) வீட்டிலிருந்த அவர், மூச்சு பேச்சின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் மருத்துவமனைக்கு அளித்த தகவலின் பேரில், ஆம்புலன்ஸில் வந்த செவிலியர்கள் அவரை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் நபேந்து முகர்ஜி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு நபேந்து முகர்ஜி கவுகாத்தியில் சிபிஐயில் பணிக்கு சேர்ந்து, 2008ஆம் ஆண்டு சிபிஐயில் உதவி ஆய்வாளராக தேர்வாகி உள்ளார். பின்னர், ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கொல்கத்தாவில் பணிப்புரிந்து வந்த நபேந்து, 2018ஆம் ஆண்டு சென்னையில் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
அவர் வங்கி மோசடி, ஊழல் போன்ற பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார். இதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடந்த இரும்புத் தாது வழக்குகளை நபேந்து விசாரணை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.