சென்னை: பரங்கிமலையில் மாணவி சத்யா, ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான சதீஷ் உயிரிழந்த மாணவியை கொலை செய்யத் திட்டமிட்டது குறித்த ஆதாரங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, இன்று (அக்.18) மூன்றாவது நாளாக இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்கின்றனர்.
முன்னதாக, உயிரிழந்த மாணவியை பின்தொடர்ந்து சென்ற சதீஷ், திட்டமிட்டு கொலை செய்தது தொடர்பான சிசிடிவி காட்சி ஆதாரங்களை திரட்ட நேற்று நான்கு குழுவாக பிரிந்த சிபிசிஐடி போலீசார் ஒரே நேரத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
ரயில் நிலையத்தில் விசாரணை: இரண்டாவது நாளான நேற்று நான்கு குழுக்களாக, சிபிசிஐடி போலீசார் ஒரே நாளில் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீடு, தியாகராய நகரில் சத்யா படித்து வந்த கல்லூரி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர், ஏற்கனவே சதீஷ் மீது புகார் அளிக்கப்பட்ட மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையம் ஆகியவற்றில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 நாட்களாகக் கொலை திட்டம்: மூன்றாவது நாளான இன்று ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீட்டிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை, உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். பின் தொடர்ந்து வந்து திட்டமிட்ட கொலையாளி சதீஷ், இந்த கொலையை செய்ததது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களை போலீசார் திரட்ட திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கொலையாளி சதீஷ் தொடர்ந்து ஆறு நாட்களாக மாணவி சத்யாவைப் பின் தொடர்ந்து, வந்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
கொலையாளியை விசாரிக்க சிபிசிஐடி மனு: மேலும் குறிப்பாக, அதன் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், மாணவி கொலை செய்யப்ப்பட்டபோது ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே போலீசார், கேண்டின் ஊழியர்கள் ஆகியோரை சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளனர். கொலையாளி சதீஷை, காவலில் எடுத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்யவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மகள் கொலை செய்யப்பட்டதால் விஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாகவும், ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளி சதீஷ் மற்றும் வேறு யார் தூண்டுதலினாலோ? மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களிலும் ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பரங்கிமலை மாணவி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்