சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களை நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அலுவலர் அருண்குமார் வருமா ஆகிய மூன்று பேரையும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு, கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது.
இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5இன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படுபவருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. குறிப்பாக அவர், 3 ஆண்டு 6 மாதங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதனால் அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்ற காரணத்தை கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க : கரோனா இரண்டாம் அலை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!