சென்னை விமான நிலைய சரக்கு பிரிவில், வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களை இறக்குமதி மற்றும் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை பத்ரா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக வேலைகள் குறைவாக இருந்ததால், ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது, நிலைமை சற்று சீரடைந்து வரும் நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, அலுவலர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், நிரந்தரமாகவே உங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக பத்ரா நிறுவன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று, விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் முன்னறிவிப்பின்றி பத்ரா நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து உடனே நிகழ்விடத்திற்கு வந்த விமான நிலைய காவல்துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மீட்பு விமானத்தில் ரூ.34 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்: மூவர் கைது