சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (35). இவர் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் கூடுவாஞ்சேரியிலிருந்து காரில் பொழிச்சலூர் சென்றுள்ளார்.
அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென பிரேக் அடித்ததால் நரேஷ் காரை நிறுத்தியுள்ளார். அப்போது பின்புறம் அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று கார் மீது மோதியது.
இதில் கார் இரண்டு சரக்கு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கி நொறுங்கியது. காரில் பயணித்துக்கொண்டிருந்த நரேஷ் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பகல் நேரத்தில் சென்னை ஜிஎஸ்டி சாலையில் சரக்கு லாரிகள் செல்லக்கூடாது எனத் தடை உள்ளது. அதை மீறி இரண்டு சரக்கு லாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் லாரி ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு