கடந்த 1980ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரால் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்ட கண்ணம்மாள் என்பவர், 1981 பெரம்பலூர் மாவட்டம் லடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு அவர் ஓய்வுபெற்ற போதும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இவரது பணி வரன்முறை செய்யப்பட்ட போதும், பணியாற்றிய காலத்திற்கான ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை தர மறுத்து 2008ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கண்ணம்மாள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, இளநிலை உதவியாளராக பணியாற்றியபோது அவரது பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற அவருக்கு தகுதியில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை உதவியாளர் மற்றும் தமிழாசிரியர் போன்ற பதவிகள் அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக தேர்வு செய்யப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார். கல்வித்தகுதியை ஆராயாமல் தமிழாசியராக நியமிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக பணியில் நீட்டிக்க அனுமதித்தே சட்டவிரோதம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக பதவியில் 25 ஆண்டுகள் நீட்டித்த அவரை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது சட்டத்தை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனால் ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை மறுத்து பிறப்பித்த உத்தரவில் தலையிட தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதேபோல தற்காலிகமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பணியில் நீட்டிப்பதை மறு ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது எனவும் உத்தரவில் அரசை வலுயுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி முதலாமாண்டு மாணவி தற்கொலை: காரணம் என்ன?