சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தொலைக்காட்சியினை பள்ளிகல்வித்துறையின் இணை இயக்குநர் கவனித்து வந்தார். இந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு புதியதாக தலைமை செயல் அலுவலர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
பின் மணிகண்ட பூபதி என்பவரை தலைமை செயல் அலுவலராக நியமித்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு வழங்கியது. அதற்கு பல்வேறுத் தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியதால், தற்காலிகமாக அந்த முடிவு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் கல்வித்தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. புதிய நியமனம் தேவைப்படின் புதிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்பும் அறிவும் அள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான நாள்