தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நீதிபதி கலையரசன் குழு அளித்த பரிந்துரையின் படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர் செய்ய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அது குறித்தும் கூட்டத்தில் விசாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு