சென்னை: தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர். அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இரண்டு மாதங்களுக்கு முன் அரசியல் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பதிவுகளால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத நிலையில், தன்னை அழைத்து விசாரிக்காமல் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பதிலளிக்க கால அவகாசம் கோரியதை ஏற்று, அக்டோபர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: கல்யாணராமன் கைது; விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் - எச்சரித்த அண்ணாமலை