திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களை பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இன்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அவர்களிடையே பேசிய சி.டி.ரவி, ‘நீங்கள் குஷ்புவிற்கு வாக்களிப்பீர்களா’ எனக் கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு மோடி ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நீங்கள் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ, எம்பி யைக்கூட கொடுக்கவில்லை. இது நியாயமா?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, "பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது எந்த அரசியலும் பேசப்படாது. தொகுதி பங்கீடு குறித்து பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக உள்ளதா என்பதை அதிமுகதான் முடிவு செய்யும்" எனத் தெரிவித்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு நடிகை குஷ்புவை பொறுப்பாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது. அதிலிருந்தே அவர் அத்தொகுதியில் பலமுறை மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, குஷ்பூவிற்கு வாக்களிப்பீர்களா எனக் கேட்டிருப்பது, அவர் இத்தொகுதியில் போட்டியிட இருப்பது உறுதியாகியிருப்பதாகவே அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி; சீட்டு ரொம்ப குறைவு தான் - தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ!