சென்னை: தமிழ்நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள மின் கட்டண விகிதத்தை உயர்த்தி, புதிய மின் கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நேற்று (ஜூலை 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய சீமான், ஜிஎஸ்டி வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் மத்திய அரசும், மாநில அரசும் மக்களை திண்டாடும் நிலைக்கு தள்ளியுள்ளன என்று குற்றஞ்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டியளித்தபோது, பள்ளியில் ஒரு மாணவி இறந்ததால், மற்ற மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி ஆகும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இத்தகைய மனநிலை கொண்டவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் எனக் கூறினார்.
மேலும், மின் கட்டண உயர்வில் திமுகவை எதிர்த்து பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும், மின்கட்டன உயர்விற்கு பாஜக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவும் திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு தமிழ்நாடு மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் நாடகமாடுவது மக்களுக்கே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: Viral Audio: காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்