திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில், தாமரைச்செல்வி என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மறுநாள் தடுப்பூசி போடப்பட்டு தாயும், குழந்தையும் மார்ச் 14ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீடு திரும்பியதும் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்களிடம் குழந்தையின் பெற்றோர் கேட்டபோதும், என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அதையடுத்து ஒருநாள் குழந்தையை குளிப்பாட்டியபோது தொடைப்பகுதிக்குள் உடைந்துபோன ஊசி இருப்பது போன்று, தாமரைச்செல்விக்கு தெரிந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஊசி இருக்கும் பகுதியைச் சுற்றி தொடைப்பகுதியை அமுக்கி உள்ளார். அப்போது உடைந்த ஊசி வெளியே வந்துள்ளது. இதுகுறித்து தாமரைச்செல்வி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்தார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணி இயக்குநர் இரண்டு வாரத்துக்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.