சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிவிழா வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. அங்கு இன்று மதியம் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர், கழிப்பறையில் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
துப்பாக்கிச் சத்தத்தைக்கேட்டு அருகில் இருந்த காவலர் ஓடி வந்து, படுகாயமடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டவர், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (32) என்பதும், இவருக்குத் திருமணம் ஆகி உமாதேவி என்கிற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.
மேலும், 2011ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்த செந்தில்குமார், கடந்தாண்டு 2021ஆம் ஆண்டு முதல் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். அவர் எழும்பூர் கெங்கு சாலையில் வசித்து வந்துள்ளார். செந்தில் குமார் இன்று வழக்கம் போல், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கப் பாதுகாப்பு பணிக்குச்சென்றுள்ளார். கடந்த 13ஆம் தேதி முதல் முக்கிய விஐபிகள் வரும் பகுதியில் பாதுகாப்புப்பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில், இன்று மதியம் 12.30 மணியளவில் அங்கு உள்ள கழிவறைக்குள் சென்று உள்பக்கம் தாழிட்டு, தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் ரக துப்பாக்கியால் வலது தோள்பட்டைக்கு மேல் கழுத்திற்குக்கீழ் பகுதியில் சுட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கதவைத் திறந்து வெளியே வந்து விழுந்த செந்தில்குமார், மீண்டும் இரண்டாவது முறை துப்பாக்கியால் சுட முயற்சி செய்தபோது அங்கு பணியில் இருந்த காவலர் அவரின் துப்பாக்கியைப் பிடுங்கியுள்ளார்.
பின்னர், சக காவலர்கள் மற்றும் பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிசெய்தனர். இதைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை ஆணையர் சௌந்தரராஜன் சம்பவ இடத்திற்குச்சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
செந்தில்குமார் பயன்படுத்திய துப்பாக்கியைப் பரிசோதித்த போலீசார், அவர் ஒருமுறை மட்டும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதை கண்டுபிடித்தனர். மீதமுள்ள ஐந்து குண்டுகளை துப்பாக்கியில் இருந்து மீட்டனர். சம்பவம் தொடர்பாக மதுரையில் உள்ள செந்தில் குமாரின் பெற்றோர், மனைவி ஆகியோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பெரியமேடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முதற்கட்டமாக, உயிரிழந்த காவலர் செந்தில் குமாருக்கும், அவரது மனைவி உமாதேவிக்கும் அவ்வப்போது பிரச்னை இருந்து வந்துள்ளது. இரண்டு குடும்பத்தைச்சேர்ந்தவர்கள், இருவரிடமும் சமாதானமாகப் பேசி ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து, இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் உமாதேவி செந்திலைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச்சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, செந்தில் குமார் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் குடும்பப்பிரச்னை காரணமாகத்தான் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்கிற அடிப்படையிலும் விசாரணை நடைபெறுவதாக காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை