சென்னை: தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, வார இறுதி நாள்களில் கோயில்களை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்கள் வார இறுதி நாள்களில் மூடப்பட்டுவருகின்றன எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அன்றைய தினம் கோயில்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அரசு தரப்பிலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(அக்.13) மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் கோயில்கள் திறப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், கோயில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கட்டும் என்று தெரிவித்தனர். அதன்படி நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியாகஉள்ளது.
இதையும் படிங்க: விஜயதசமியன்று கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா? - அரசு கருத்து தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு