இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் கூறியபோது, “கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரியது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட்டால்தான் சமூக எதிர்ப்பு சக்தியை பெற முடியும். அக்கால வரம்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாகவும் வெளிப்படையாகவும் வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அரசியல் லாபத்திற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும் தடுப்பூசிகளை அவசர கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ? என்ற ஐயம் உருவாகிறது. கோவக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சரியல்ல.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு அறிவித்துள்ள போதிலும், பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். ஏனெனில் கோவக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெறும் போதே, மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசியை வழங்குவதும் மூன்றாம் கட்ட பரிசோதனை போன்றதுதான். அதோடு தடுப்பூசிகள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மூடுவதை மத்திய அரசு கைவிட்டு, தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா மினி கிளினிக்குகள் என்பது மத்திய அரசினுடைய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஓர் அங்கமாகும். அந்த திட்டத்தைதான் தமிழக அரசு அம்மா மினி கிளினிக் என்ற பெயரில் செயல்படுத்துகிறது. எனவே, முதலமைச்சர் கூறுவது போல் இது தமிழக அரசின் திட்டமும் அல்ல, இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டமும் அல்ல” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜைடஸ் காடிலா தடுப்பூசி மூன்றாம்கட்ட பரிசோதனைக்கு அனுமதி!