தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அந்த மனுவை கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்நிலையில் வழக்கில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.ரங்கநாதன் மீண்டும் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், அரசால் அமைக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற பள்ளியில் சாதி பார்க்கப்படாமல் அனைத்து சாதி மாணவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நல சங்க வழக்கில் தாங்களும் ஒரு இடையீட்டு மனுதாரர் ஆக இருந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசு உத்தரவை ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அர்ச்சகர் பயிற்சி பெற்ற பள்ளியில் பயிற்சி பெற்று தீட்சை பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தங்களை இடையீட்டு மனுதாரராக விசாரிக்க வில்லை என்றால், நேரடி பாதிப்புக்கு உள்ளாவது தாங்கள்தான் என்றும் தங்கள் தரப்பு விசாரிக்கப்படவில்லை என்றால் பாரபட்சமாக இருக்கும், தங்களுடைய உரிமை பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படும் குப்பை - விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்