சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்குள்பட்ட அரிவாக்குளத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்ததால் வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார் .
தொடர்ந்து அமைச்சர் தா.மோ. அன்பரசன், “திருவொற்றியூர் தொகுதியின் அரிவாக்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 28 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு 27.122021 அன்று இடிந்து விழுந்துவிட்டன.
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
இத்தகவலை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் 28 குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .1 லட்சம் வீதம் ரூ .28 லட்சம் வழங்க ஆணையிட்டு, அன்றைய தினமே வழங்கப்பட்டது” என்றார்.
மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த வீடுகளை இழந்த 28 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று ஜனவரி 2 ஆம் தேதி, 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக்கொண்டு மாற்று வீடுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த 17 குடும்பங்களில் 9 குடும்பங்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ எர்ணாவூர் திட்டப் பகுதியிலும் , 8 குடும்பங்களுக்கு என்.டிஓ குப்பம் திட்டப் பகுதியிலும் மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
கருணைத் தொகையும் தரமான வீடுகளும்
மீதமுள்ள 11 குடும்பங்கள் அந்த இடங்களில் உள்ள பழைய குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாகக் கட்டப்படவுள்ள குடியிருப்புகளில் எங்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.
மறு கட்டுமானம் வரை வெளியே வாடகைக்கு இருக்கும் காலத்திற்கு அரசு தருகின்ற கருணைத் தொகை ரூ.24,000 நிதி அவர்களுக்கு வழங்கப்படும். அக்குடும்பங்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
புதிய குடியிருப்பு கட்டடப் பணி முடிந்தவுடன் அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் ஒதுக்கப்படும் மேலும் தரக்கட்டுப் பாட்டுக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அப்பகுதியில் மீதமுள்ள 308 வீடுகளில் வாழும் குடும்பங்கள் படிப்படியாக காலி செய்து கொடுத்தால் அப்பகுதியிலேயே நல்ல தரத்துடன் வீடுகள் கட்டப்பட்டு அங்குக் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், தலைமை பொறியாளர் இராம சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க: Mega Vaccine Drive | மெகா தடுப்பூசி முகாமில் 15.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்