நுவரேலியா(இலங்கை): இலங்கையிலுள்ள நுவரெலியா கொட்டகலையில் இன்று (மே 01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் உழைப்பாளர் தினக்கூட்டம் நடைபெற்றது. இந்த உழைப்பாளர் தினக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான், மேயர் - நாடாளுமன்ற உறுப்பினருமான ராமேஷ்வரன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திரும்பிப் பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்.
இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால் தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமன் எப்படி சஞ்சீவி மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது- ஜெனரல் மனோஜ் பாண்டே!