பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100 ஆவது பிறந்தநாள் விழா மலரை வெளியிட்ட பின், தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் வீட்டில் ஆயுதக்கிடங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்தோ, துப்பாக்கி கலாச்சாரம் குறித்தோ பேச திமுகவிற்கு தகுதி இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதால் தான் முதலீடுகள் அதிகளவில் வருகின்றன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருவது அவரது கட்சியை வலுப்படுத்த மட்டுமே. அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை தகவல் வரவில்லை. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவை பலப்படுத்த அதன் தலைவர்கள் இங்கு வருகிறார்கள், அதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. அதேவேளையில் அதிமுகவுடன் பாஜக தற்போதும் கூட்டணியில் இருப்பதால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்தால் தவறு ஒன்றும் இல்லை.
திமுகவினர் எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசி வருகின்றனர். துணைவேந்தர்கள் மீதோ, அரசு ஊழியர்கள் மீதோ புகார்கள் இருந்தால், அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்பதே விதி. அதன் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாருக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் “ என்றார்.
இதையும் படிங்க: சூரப்பா பதவியேற்ற நாள் முதல் விசாரணை நடத்தப்படும் - விசாரணை அலுவலர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்!