மதுரை: கடந்த நவ.3ஆம் தேதி எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் பிரமாணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர் திராவிடர்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
சர்ச்சையான கருத்து: இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமூகவலைத் தளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: "ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம்" - நீதிபதி கோரிக்கை!
புகார் டூ வழக்கு: இந்நிலையில் மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில் முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில்,"தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.