சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் , புள்ளி விவரங்கள் தயார் செய்யும் பணியை குறைத்து கற்பிக்கும் பணியில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 2021-2022 ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விழாவில் 393 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், வெள்ளி பதக்கமும், பாராட்டு சான்றிதழும் 10,000 ரூபாய் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஆசிரியர் கற்று கொடுப்பது தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நேர்த்தியாக வாழ வழி வகுக்கிறதாகவும் . திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அரசு பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் கஷ்டம், ஆனால் மாணவர்கள் மத்தியில் அன்பில் மகேஷ் நல்ல மதிப்பும் நேசத்தையும் பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்: அதனைத் தொடரந்து பேசிய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் ஐ. லியோனி , ”கல்லூரி மாணவிகளின் கரவொலியை பெற்ற அமைச்சர் தம்பி அன்பில் மகேஷ் தான் . ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையே சேரும்.
பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும், நான் பள்ளி ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன். வினையிலேயே உயிரை வைத்திருக்கின்ற மொழி தமிழ் மொழி . டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இடம் கிடைக்காமல் இருந்த இந்த இடத்தில் மேடையில் ஆசிரியராக இடம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது .
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையரை பார்க்க வருபவர்கள் பார்க்க முடியாத நேரத்தில் தன்னிடம் வந்து குறைகளை தெரிவித்து விட்டு செல்கின்றனர். அப்போது, ஆசிரியர்கள் புள்ளி விவரங்கள் தயார் செய்யும் பணியை குறைத்து விட்டு கற்பிக்கும் பணியில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பணியிடம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்தது போல் மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடமும் தொடர்ந்து இருக்கலாம்” என தெரிவித்தார்.
தீர்வு காணப்படும்: அதனைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,
“ஆசிரியர் தினமான இன்று முதலமைச்சர் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தக் கூடிய வகையில் இரண்டு மாபெரும் திட்டங்களை இன்றைய தினம் தொடங்கி வைத்து கல்வித் துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேடையில் பேசும் போது 2 காேரிக்கைகளை வைத்தனர். அந்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய தீர்வு காணப்படும்.
ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட விட்டாலே அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு என்பது இரத்த பந்தத்தையும் தாண்டி மாணவர்களின் எதிர்காலத்தை பலப்படுத்தக்கூடிய வகையில் ஒரு சிறந்த உறவாக அமைந்திருக்கிறது.
ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கூட பொறுப்பெடுத்தாமல் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கு அரும் பணியாற்றக்கூடிய பணி ஆசிரியர் பணி . ஆசிரியருக்கு சுகந்திரம் தேவை, அதை அளித்தாலே அவர்கள் மாணவர்களை வளப்படுத்தி விடுவர்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். முன்பெல்லாம் கண்களை விட்டுவிட்டு மற்ற இடங்களில் அடிக் கொடுக்கலாம் என பெற்றோர்கள் கூறுவார்கள் . ஆனால் இன்றைக்கு அந்தமாதிரியான சூழல் இல்லை. அதற்கு காரணமாக சமூக வலைத்தளங்கள். அவர்களாக ஒன்றை முடிவு செய்து விட்டு அதற்கு நாம் தான் காரணம் என்ற பதிலளிக்க தள்ளுகின்றனர்” என பேசினார்.
இதையும் படிங்க: கல்வித்தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் நியமனம் ரத்து