சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவு பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களை இறக்குமதி மற்றும் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை, பத்ரா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இத்தனியார் நிறுவனத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை இரவு 12 மணியோடு பத்ரா நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைவதால், ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏஐஏடிஎஸ் நிறுவனத்திடம் கார்கோவில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒப்படைக்கப் போவதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதனால் பத்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு தொடர்ந்து பணிகளை வழங்க வேண்டும் எனக் கோரி விமான நிலைய சரக்குப்பிரிவு பகுதியில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய தொழிலாளர் சங்க நிர்வாகி ஜஹாங்கீர், “ கடந்த காலங்களில் கான்டிராக்ட் மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வந்தது. எனவே பத்ராவிற்கு பிறகு வரப்போகும் காண்டிராக்ட் அல்லது அதற்கு பொறுப்பான ஏர்போர்ட் அத்தாரிட்டியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை தர வேண்டும். இல்லையென்றால் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்க்கு செல்வோம் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து நாட்டு பயணிகளும் பரிசோதிக்கப்படுகிறார்களா?