சென்னை: விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்லும் ஏர்இந்தியா விமானம் இன்று (செப்.24) காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 117 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 123 பேர் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுள்ளார். விமானத்தை தொடா்ந்து இயக்கினால்,பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த அவர் அவசர அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
உடனடியாக கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், விமானத்தை உடனடியாக சென்னைக்கே திருப்பி வரும்படி உத்தரவு பிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னையில் விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் துரிதமாக செய்ய விமான நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
விமானத்தில் கோளாறு
அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன. இதையடுத்து ஏர்இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் காலை 9.40 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. இதனால், விமானத்திலிருந்த 123 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பயணிகள் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்தில் ஏறி, விமான இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து, பயணிகள் அனைவரையும் ஏர்இந்தியா விமான அலுவலர்கள் மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர்.
இதையும் படிங்க: ஆப்கனுக்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்?