சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் காணொலிகளையும் ஊடகங்களுக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தனது பதிலுரையில், “இது பரிசீலனையில் இருக்கிறது” என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் அமைச்சர்கள் அளிக்கக்கூடிய பதில்கள் மட்டுமே ஊடகத்திற்கு வழங்கப்படுகின்றன.
இவை ஊடகத்திலும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின்றன. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக்கூடிய பேச்சுக்கள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசக்கூடிய காட்சிகளை ஊடகத்திற்கு வழங்க வேண்டும். இதனை மக்களும் அறிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சபாநாயகர் மு. அப்பாவு, “அந்தக் கோரிக்கையை எனக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்று இருக்கிறது, அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா செல்லும் மோடி!