சென்னை: கழகத்தின் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்! நூறாண்டு, இன்னும் பல நூற்றாண்டு ஓங்குபுகழ் எய்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழாவைக் கொண்டாட கழக உடன்பிறப்புகளும், கழகத்தின் மீது பேரன்புகொண்ட அன்பர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இவ்வேளையில், பொன்விழா கொண்டாட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் தலைமைக் கழகத்தில் சிறப்புற நடைபெற்றது.
எம்ஜிஆருக்கு நாடெங்கும் வரவேற்பு
மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களை விட்டு அகலாது ஆண்டுகள் கரைந்தாலும் வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ்கொண்ட எம்ஜிஆர் 1972 அக்டோபர் 17 அன்று 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற மகத்தான இயக்கத்தைத் தொடங்கியபோது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
நேற்றும், இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் சக்தியும், மக்கள் தொண்டாற்றுவதில் நிகரில்லாததும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்பதை வரலாறு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, நாடெங்கும் கிடைத்த வரவேற்பைக் கண்டும், தேசிய அளவில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல இருப்பதை அறிந்தும், எம்ஜிஆர் கழகத்தை 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
தலைமைக் கழகம் இனி 'எம்ஜிஆர் மாளிகை'
'எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே' என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளே அவரது உடன்பிறப்புகளின் இதயத் துடிப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு விழாவைத் தமிழ்நாட்டிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுவரும் பிற மாநிலங்களிலும், பின்வரும் வகைகளில் ஆண்டு முழுவதும் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- கழகத்தின் பொன்விழா ஆண்டைச் சிறப்பித்திடும் வகையில், பிரமாண்டமான மாநாட்டை நடத்துதல்
- பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை - LOGO வெளியிடுதல்
- பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழக முன்னோடிகளுக்கு அணிவித்தல்
- பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்களுடன், கழகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான லோகோவுடன் ஒரே மாதிரியான பதாகைகள், சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப் பொலிவுடன் அமைத்தல்
- கழகத்தின் பொன்விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், கழகம், சார்பு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும், இரட்டை இலை சின்னத்தைப் பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்களும் அமைத்தல்
- கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்தப் பொன்விழா ஆண்டுமுதல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கௌரவித்தல்
- கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி, அதில் வெற்றிபெறுபவர்களுக்கு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பொன்விழா மாநாட்டில் சான்றிதழும், பரிசும் வழங்கிச் சிறப்பித்தல்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை, கழக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்
- தலைமைக் கழகத்திற்கு 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை' எனப் பெயர் சூட்டல்
- தலைமைக் கழகப் பேச்சாளர்கள், கலைக் குழுவினரை கௌரவித்து, உதவி செய்தல்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொன்விழா நினைவு நாணயம் / பதக்கம் வழங்குதல்
- உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்குதல், பொற்கிழி (Cash Gift) அளித்தல்
- எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றியும் கழகம் பற்றியும் நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கௌரவித்தல்
- எம்ஜிஆர் மன்றங்களிலிருந்து கழகப் பணிகளைத் தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்பு செய்தல்
- கழகப் பொன்விழாவை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில், காலச் சுருள் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட விளம்பரப் படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்புதல்.
கழக பொன்விழாவை மேலும் சிறப்பித்திடும் வகையில், கழக நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் பரிசீலனை செய்து, இந்தப் பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும். ஜனநாயகத்திற்குச் சாட்சி சொல்லும் திவ்ய தேசமான இந்தியாவில் அரை நூற்றாண்டுகளாக, மக்களின் இதய சிம்மாசனத்தில் நிறையாசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்கங்களில் ஒன்றுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
69 விழுக்காடு - சமூகநீதியை நிலைநாட்டிய இயக்கம் அதிமுக
வாரிசு அரசியல், மதம் மற்றும் ஜாதி அரசியல், மனிதர்களைப் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல் என்ற சிறுமைச் சிந்தனைகள் ஏதும் இன்றி, எல்லோருக்கும் எல்லாமாகத் திகழ, தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா காணும் இவ்வேளையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறது.
அரசியல் இயக்கத்தைத் தொடங்கிவிட்டு மக்கள் செல்வாக்கைத் தேடும் அரசியல் கட்சிகளுக்கு மாறாக, மக்கள் திரண்டு ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கு உத்வேகம் கொடுத்த இயக்கம் என்றால், அது எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே சாரும்.
உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் சத்துணவுத் திட்டம், அம்மா உணவகம், சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை எல்லோருக்கும் வழங்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கும், பட்டியல் இனத்தோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிசெய்த சிந்தனைப் புரட்சி,
ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புத்தம் புதிய திட்டங்கள் என்று காலமெல்லாம் நிலைத்திருக்கும் மக்கள் நல்வாழ்வுப் பணிகளை இந்திய நாட்டுக்கே அறிமுகம் செய்த ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகளே.
கழக ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகிட, கழகத்தின் பொன்விழா ஆண்டில் சூளுரைத்து, கழகப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதே எங்கள் பொன்விழா செய்தியாகும்" என்று தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக பொன்விழா - தொண்டர்களுக்கு வேண்டுகோள்