தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையே, மருத்துவம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சிகளை இணைந்து மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இரு பல்கலைக்கழக பதிவாளர்களும் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், துணை மருத்துவப் படிப்புகளை இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கி வருகிறது. அதேபோல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மற்றும் மீன்வளத்துறையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி அளிக்கிறது. இரண்டு பல்கலைக்கழகங்களும் தங்களிடம் உள்ள பரிசோதனைக் கூடம் மற்றும் பிற வசதிகளை அந்தந்த துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தோடு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இந்த இரு பல்கலைக்கழகங்களும் கரோனா தொற்று நோய் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றது. வைரஸ் செல்கள் மீதும், விலங்குகள் மீதும் சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர் மற்றும் நொச்சி குடிநீர் ஆகிய மருந்துகளைக் கொண்டு ஆராய்ச்சிகளை இந்த பல்கலைக்கழங்கள் ஒன்றிணைந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகளவில் கரோனா பாதிப்பு... ஒரே வாரத்தில் 4ஆவது இடத்தில் இந்தியா!