கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மார்ச் 25ஆம் தேதி மாலை 6 மணியுடன் டீக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. தேநீர்க் கடைகளில் எப்போதும் கூட்டம் இருக்கும் என்பதால், இதன் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்பாகிவிடக் கூடாது என்று, மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், 46 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் தேநீர்க் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பார்சல் வாங்கி செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் உள்ள கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
கடையைத் திறந்தாலும், மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், இதனால் வாங்கிய பாலை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், கடைக்கு வந்து தேநீர் அருந்திவிட்டுச் செல்வதற்கு அனுமதி இல்லாமல், பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கூறுகின்றனர்.
இத்தனை நாள்களாக தேநீர்க் கடை திறக்கப்படாததால், கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர், பால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஆனால், தற்போது அரசு அளித்துள்ள அனுமதி அவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெயில் கொளுத்தினாலும் சென்னை மக்கள் சூடான தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். அதுவும், நீண்ட நாள்களுக்குப் பிறகு தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடை திறந்த இன்று ஒருசிலர் அலுவலகத்துக்குச் செல்லும் முன் அவசர அவசரமாக தேநீர் அருந்தி சென்றனர்.
தமிழ்நாட்டில் தேநீர்க் கடைகள் உட்பட 34 வகையான கடைகளைத் திறக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 33 விழுக்காடு பணியாளர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்களும் பணிகளைத் தொடரலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளதால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக வெறிச்சோடிக் காணப்பட்ட மாநகரச் சாலைகள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
சிறிய அளவிலான மின்சாதனக் கடைகள், வாகனப் பழுது நீக்கும் கடைகள், வாகன விற்பனை செய்யும் ஷோரூம்கள், சாலையோரக் கடைகள், பெட்டிக்கடைகள், நடைபாதைக் கடைகள், சாலையோரம் விற்கப்படும் மோர், இளநீர் தள்ளு வண்டிகள் போன்றவையும் தத்தமது செயல்பாட்டை தொடங்கி வருகின்றன.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்: சூடு பிடிக்கும் இளநீர் வியாபாரம்!