நிவா் புயல் காரணமாக பாதுகாப்பு கருதி நேற்றிரவு 7 மணியிலிருந்து சென்னை விமான நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. அதிகாலை புயல் கரையை கடந்ததையடுத்து, விமான நிலையம் இன்று மீண்டும் செயல்படத் தொடங்கியது.
அதன்படி, விமான நிலையம் இன்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இருப்பினும், மேகமூட்டம் மற்றும் மழை காரணத்தால் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, பெங்களூரூ, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய 38 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தத்தில் 79 உள்நாட்டு விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும், இயக்கப்படும் மற்ற விமானங்களும் தாமதமாகவே இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களை தொடா்பு கொண்டு விமானங்கள் புறப்பாடு, வருகை நேரங்களை உறுதி செய்து கொள்ள விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமாக உள்ள திருப்பூர் மாநகரச் சாலைகள்; சீர் செய்யக் கோரும் மக்கள்!