சென்னை:கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஶ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவை புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அன்று மாலையே தென் சென்னை வருவாய் கோட்டசியர் சாய் வர்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
மேலும் அதிமுகவில் இருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இதையடுத்து அலுவலகத்துக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் சென்னை நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் நேற்று (ஜூலை 20)தீர்ப்பு அளித்தது.
அதில் அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி, சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் அ.தி.மு.க. அலுவலகத்திற்குப் போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் கூறி இருந்தது.
இந்நிலையில் இன்று (ஜுலை 21)காலை 10.55 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெக ஜீவன் ராம் ராய்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கடந்த 11 ஆம் தேதி வைக்கப்பட்ட சீலை அகற்றி அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைத்தார். அப்போது முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் உடன் இருந்தார்.
இதையும் படிங்க:அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு