சென்னை: ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நான்கரை மணி நேரம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் 75 மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 150 பேர் பங்கேற்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்துவது, வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நான்கரை மணி நேரம் கருத்து சுதந்திரம் அடிப்படையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆரோக்கியமான விவாதம் நடந்தது. நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டோம். பொதுக்குழு முன்பாக நடந்துள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று கூறியுள்ளனர். யார் தலைமை என்பது குறித்து வரும் நாட்களில் கட்சிதான் முடிவு செய்யும். கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும். முன்பிருந்த நிலை வேறு, இப்போதைய நிலைமை வேறு, எனவே காலத்தின் கட்டாயத்தால் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தினோம். சூழல் மாறியுள்ளது. எனவே ஒற்றைத்தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
2,600 பேர் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். இடப்பற்றாக்குறையால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கட்சிக்கு தொடர்பு இல்லாத சசிகலா குறித்து விவாதித்து நாங்கள் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். பாமக, பாஜகவை காட்டிலும் அதிமுகதான் முதன்மையான கட்சி" என்று கூறினார்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...