சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேசிய கல்வி கொள்கை எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று 50 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று அதனை முதலமைச்சரிடம் கொடுத்து இருக்கிறோம். தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதனை மக்களிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகையை நிறுத்தப் போவதாக திமுக மக்களிடம் தவறான பரப்புரையை முன்வைக்கிறது. திமுகவிடம் நாங்கள் கேட்கும் கேள்வி, மூலப்பத்திரம் எங்கே என்பதுதான். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. அது வலிமையான கூட்டணியாக இருக்கிறது. மற்றபடி இது தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் பதில் கிடைக்கும்" என்றார்.
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, அதிமுக தலைமையில்தான் ஆட்சி என்று கே.பி முனுசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், இதற்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்றார்.
அதிமுக - பாஜகவுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றால்தான் கூட்டணி’