சென்னை: தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22 ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26 ந் தேதி முதல் ஆகஸ்ட் 10 ந் தேதி வரையில் பெற்றனர்.
3 லட்சம் விண்ணப்பங்கள்
தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு லட்சத்து, 20 ஆயிரம் இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனை அரசு கல்லூரியின் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மாணவர்கள் சேர்க்கை
மேலும், மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை அரசுத் தேர்வுத்துறையின் மூலம் சரிபார்க்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் தவறு கண்டறியப்பட்டால், அவரின் சேர்க்கையை நிறுத்த வேண்டும்.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சரிபார்த்து, கல்லூரியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். மாணவர்களை கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் அல்லது நேரில் வரவைத்து சேர்க்கை நடத்தலாம்.
மாணவர்கள் சேர்க்கையின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மாணவர்களை கல்லூரிகளில் ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் செப்டம்பர் 3ஆம் தேதிவரையில் சேர்க்கை நடத்தலாம்.

விதிகளை பின்பற்றி..
இதுகுறித்த விவரங்களை மாணவர்களுக்கு செல்போன்,மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களிடம் அச்சிடப்பட்ட விண்ணப்பத்தை, சேர்க்கையின்போது அளித்து பூர்த்தி செய்து பெறவேண்டும்.
மாணவர் ஒரு பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் செய்திருந்து, அந்த இடங்கள் நிரம்பிவிட்டால் வேறு பாடப்பிரிவில் விதிகளை பின்பற்றி சேர்க்கலாம்.
மாணவர்களை கணினிப் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'பொறியியல் படிப்பில் சேர 1,61,679 மாணவர்கள் பதிவு'