சென்னை: வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ''பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூரக்கல்வி முறையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம், நர்சிங், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற படிப்புகளைத் தடை செய்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திறந்தநிலை, தொலைதொடர்பு விதிகளிலும் மேற்குறிப்பிட்ட படிப்புகளைத் தடை செய்தது மட்டுமின்றி நேரடி முறையில்தான் பயில வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்த தடை விதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு ஒத்தி வைப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இதுபோல அங்கீகாரம் இல்லாத படிப்புகளை நடத்தி வருவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழு, பார்கவுன்சில் உள்ளிட்டோர் இது குறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்