பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கும் கரோனா தொற்றியது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, ஜூலை மாதம் ஏழாம் தேதி வரை மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றி வரும் பழனிசாமிக்கு, அரசுத் தேர்வுகள் துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பழனிசாமிக்கு கூடுதலாக இம்முழு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கபசுரக் குடிநீர், நொச்சி குடிநீரை விலங்குகளுக்கு கொடுத்து ஆராய்ச்சி!