எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்தவர் உஷா ராணி. இவருக்கு வயது 66. சமீபத்தில் சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்ட இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று (ஜூன் 21, 2020) அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ், மலையாள மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ்பெற்றார். திருமலை தென்குமரி, அரங்கேற்றம், புதிய வார்ப்புகள் உள்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் மறைந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் என்.சங்கரன் நாயரின் மனைவியாவார். இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இவரது உடல் இன்று (ஜூன் 22) போரூர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.