சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, கைது செய்யபட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும், அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும், சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததால், ஹேம்நாத் தம்மை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும், அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும்
மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், அது உண்மை இல்லை என தெரிய வந்ததால், புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல், ஹேம்நாத் தரப்பிலும் சையத் ரோகித்தை மிரட்ட மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, ஹேம்நாத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நிலம் இங்கே... மருத்துவமனை எங்கே? மதுரை எய்ம்ஸிற்கு படையெடுத்த எம்.பி.க்கள்