இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகியம்மாள் கல்லூரியில் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்கள், தங்களுடைய வேட்புமனுக்களை வரும் ஜூன் 11ஆம் தேதி காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வரும் ஜூன் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். சங்க உறுப்பினர்கள் மட்டுமே சங்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்யவோ, போட்டியிடவோ, முன்மொழியவோ, வாக்களிக்கவோ முடியும். தேர்தலில், தலைவர் பதவி - 1, உப தலைவர் பதவி - 2, செயலாளர் பதவி - 1, பொருளாளர் - 1, செயற்குழு உறுப்பினர்கள் - 24 என மொத்தம் 29 பதவிகளுக்கு ஓட்டெடுப்பு நடைபெறுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, சரத்குமார் மற்றும ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ராதிகா தலைமையில் எதிர் அணி களமிறங்க வாய்ப்புகள் உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.