சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு இப்படத்தைக் காண விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக நேற்று (ஏப்.10) இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு, நடிகர் விஜய் மனம் திறந்து பேட்டியளித்தார். இந்தப் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பானது. வழக்கமாக விஜய் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது ரசிகர்களுக்கும் அவரது நண்பா, நண்பிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தனது ட்ரேட்மார்க் பாணியில் அன்றைய சமூக சூழ்நிலையை விளக்கும் விதமாக ஒரு குட்டி கதையை சொல்வார்.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், அதற்கு ஈடுகொடுக்க ஒரு புதுமையான முயற்சி மேற்கொள்பட்டது. அதாவது, 'பீஸ்ட்' படத்தின் இயக்குநர் நெல்சன் தொகுப்பாளராக களமிறங்கி 'விஜய்யுடன் நேருக்கு நேர்' என்ற தலைப்பில் நடிகர் விஜய்யிடம் சிறப்புப் பேட்டி எடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின்போது, புதுக்கோட்டையில் சிஐஎஸ்ஃப் வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சியில் தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு சிறுவன் மீது பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நெல்சன் கேள்வியெழுப்பினார். அதற்கு, பதில் அளித்துப் பேசிய விஜய், 'இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் (காவல் துறை) கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற பல சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் இதுபோன்ற பயிற்சி மையங்கள் இருப்பதைத் தவிர்த்து ஊருக்கு வெளியில் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற உடனேயே அந்த பயிற்சி மையம் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. எனினும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கூடுதல் ஆலோசனையாகக் கணினி வழியில் stimulator தொழில்நுட்பத்தில் துப்பாக்கிப் பயிற்சியை மேற்கொள்ளலாம்' என நடிகர் விஜய் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தளபதி 66 நேரடித் தெலுங்குப் படமா?- விஜய் பதில்