சென்னை: தன்னை மதம் மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், கர்ப்பிணியான தன்னை அடித்ததாகவும், சின்னத்திரை நடிகை திவ்யா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்தும் காவல் துறையில் அளித்தப்புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அர்ணவ் திருவேற்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக்.9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், தனது மனைவிக்கு ஒரு விதமான மனநிலைப்பாதிப்பு இருப்பதாகக் கூறிய அர்ணவ் குழந்தை பிறந்த பின் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளத்தான் திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் தான் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைக்கு நண்பர் ஈஸ்வர் தான் காரணம் என குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும், தனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க முயற்சிப்பதுபோல் தன்னிடம் தொலைபேசியில் பேசும் ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக அர்ணவ் புகார் தெரிவித்துள்ளார். தானும் சேரியில் பிறக்கவில்லை என்றும் நண்பர் ஈஸ்வரும் சேரியில் பிறக்கவில்லை என்று தெரிவித்த அர்ணவ்; ஆனால், ஈஸ்வர் ஏன் கொச்சையான வார்த்தைகளில் பேசுகிறார் என்று தனக்குப் புரியவில்லை என்றும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது சேரியில் உள்ளவர்களை தரம் தாழ்த்துவது போல், பேசுவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துக்காட்டுவதற்காகவே சேரி வாழ் மக்களை உதாரணமாகக் கூறியதாக அர்ணவ் விளக்கம் அளித்தார். எனினும், ஒரு தவறான உதாரணத்திற்கு சேரி வாழ் மக்களை மையப்படுத்தி அர்ணவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணியான தன்னை கணவர் அடித்ததால் மருத்துவமனையில் அனுமதி; கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்