சென்னை: மத்திய அரசின் திட்டமான பால் பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 113.75 கோடி மூலம் மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "1962ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணையாக நியூசிலாந்து அரசாங்க நிதி உதவியுடன் நிறுவப்பட்ட மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணை, ஆவின் குடும்பத்தில் முதன்முதலில் நிறுவப்பட்ட ஒரு பழமையான பால் பண்ணையாகும்.
மத்திய அரசின் திட்டம்
கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் உடையதாக செயல்பாட்டில் உள்ளது.
மேலும், வடசென்னை மக்களுக்கு தரமான பால் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சமீபத்திய ஆண்டுகளில் சிப்பங்கட்டுதல், குளிர்பதன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் 53 வாடகை பால் வழித்தட வாகனங்கள், 33 தனியார் முகவர் வாகனங்கள், மூன்று இணை பால் வழித்தட வாகனங்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மத்திய அரசின் திட்டமான பால் பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 113.75 கோடி மூலம் மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை, நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு திறனுக்கு இதனை விரிவாக்கம் செய்ய இயலும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்