சென்னை: அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதோடு மசாஜ் நிலைய உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹேமா ஜூவாலினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு இன்று (ஏப். 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திரமான முறையில் தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்றும், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக்குதான் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசின் உத்தரவுப்படி உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளித்தார்.
காவல்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஸ்பா உரிமையாளர் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டுகிறாரே தவிர, தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என குறிப்பிட்டார்.
காவல் ஆய்வாளர் சோதனை நடத்தியதில் சட்ட விரோதம் இல்லை என தெரிவித்த நீதிபதி, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி ஹேமா ஜுவாலினி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் விற்பனை - 3 மாதங்களில் 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது