சென்னை: சென்னையில் இறுதி ஊர்வலத்தில் இளைஞர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களை அவர்களின் பெற்றோர் விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தாம்பரம் காவல் நிலையத்தில் பரபரப்பு உண்டானது.
தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் விபத்தில் உயிரிழந்த அசோக்குமார் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் பிரசாந்த் என்பவரை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
தப்பி ஓடிய அந்தக் கும்பல் காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு பணம் கொடுக்க மறுத்து நாட்டுப் பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஆறு பேரைக் கைது அவர்களிடம் இருந்து பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரசாந்திற்கும், தாவீத் என்ற கார்த்திக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதத்தில் அவரை வெட்டியதாகத் தெரிவித்தனர். ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த மூன்று முக்கிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்த போது தாம்பரம் பகுதியில் மீண்டும் கெத்து காட்ட வந்த முடிச்சூர் லட்சுமி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (26) தாம்பரம் இருபுலியூரைச் சேர்ந்த தனசேகரன் (24) மற்றும் அரவிந்த் (23) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.
அப்போது மூன்று பேரையும் விடுக்க வேண்டும் எனக் கூறி தாம்பரம் காவல் நிலையத்தின் முன் மூன்று பேரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். உடனே போலீசார் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின்னர் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வீடியோ: விரட்டி விரட்டி வனக்காவலர்களை தாக்கிய சிறுத்தை